Saturday, July 17, 2010

ரெங்குடுவின் ரெட்டைவால்

நான் ரொம்ப சமத்து, ஆங்கிலத்துல சொல்லணும்னா, "ரிசர்வ்ட் டைப்". ஆனாலும் சமயத்துல என்னையும் அறியாமல்? என் ரெட்டை வால் வேலை காட்டியிருக்கிறது, பல சமயங்களில். சாம்பிளுக்கு இதோ. வால் நம்பர் ஒண்ணு:
அரியமங்கலத்தில் சேஷசாயி இன்ஸ்டிடியுட்டில் தொழில் நுட்ப கல்வி படிக்கும்போது நடந்த விஷயம். கடைசி பீரியட் சீக்கிரம் முடிந்து விட்டால் ஓட்ட, ஓட்டமாக ஓடி வந்து 4:40 ரயிலை பிடித்து விட்டால் போதும், வீட்டுக்கு (லால்குடியில் இருக்கிறது) ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விடலாம்.....என்று புளுக மனமில்லை. அந்த ரயிலில்தான் டவுன் ஸ்டேஷனில் "எஸ்.ஆர். சி", எஸ்.வீ.எஸ்"பிகரெல்லாம் ஏறுவார்கள். அவர்களை நோக்கி ஜொள்ளு விட்டுக்கொண்டே வந்தால் ரயில் பயணம் போரடிக்காமல் இருக்கும். இதுக்கு போட்டி போட்டுக்கொண்டு கையில் 'மினி டிராப்டார்'ஐ தூக்கிக்கொண்டு ஓடி வந்து பிடித்து விடுவோம். சில நாட்களில் கடைசி பீரியட் ஆசிரியர் வரவில்லையென்றால் ஜாலிதான், நிதானமாக நடந்து வந்து தலையை வாரி ஒப்பனைஎல்லாம் செய்து கொண்டு வண்டியில் ஏறிவிடுவோம். அப்படி ஒருநாள் தான் என்னுடைய ரெட்டை வால் வெளியில் தலை காட்டியது. என் வாலை விட இரு மடங்கு நீளமானது நாகராஜனுடையது. அவன் ஐடியா தர, மற்ற நண்பர்களை வெறுப்பேத்த தயாரானோம். 'ப்ளான்' இதுதான். ரயில் வருவதற்கு முன் "கை காட்டி"யை இறக்குவார்கள். கை காட்டி இறங்கியதும் மாணவர்கள் தொலை தூரத்திலிருந்து ஓட்டமாக ஓடி வருவார்கள். 4: 20 கே வந்துவிட்ட நானும், நாகராஜனும் கை காட்டியை இறக்கும் கம்பியை ஒரு காலால் அழுத்தி இழுத்து பிடித்து கொண்டதும், கை காட்டி இறங்கி விட்டது. தூரத்திலிருந்து பார்த்த மாணவர்கள் ஓட்டம் பிடித்து வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தவுடன் கம்பியை விட்டு விட்டு அப்பாவியாக உட்கார்ந்து விட்டோம். இப்படி இரண்டு மூன்று முறை செய்து விட்டு, நான்காவது தடவை செய்யும்போது ஸ்டேஷன் மாஸ்டர் எங்களை கையும், களவுமாக பிடித்து எங்கள் 'வொர்க் ஷாப் சூபரின் டெண்டன்டிடம்' ஒப்படைத்து விட்டார். அவ்வளவுதான், எங்கள் பாசை பிடுங்கி எங்களை ஒரு வழி செய்து விட்டார்.

வால் நம்பர் ரெண்டு:
ஒரு முறை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் எனபதை ஸ்டேஷனில் உள்ள கரும் பலகையில் எழுத சொல்லி சாக்பீஸை எங்களிடம் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்க, அத்தனை ரயிலும் ஒரு மணி நேரம் தாமதம் என்று நாங்கள் வேண்டுமென்றே எழுதி விட வந்ததே கோபம் அவருக்கு. மீண்டும் வொர்க் ஷாப் சூப்பரிண்டேண்டன்ட், பின்பு பிரின்சிபால் என்று பெரியதாய் போய் விட்டது. ஒன்று சொல்ல வேண்டும். திருவாளர் அனந்த நரசிம்மாச்சார், அவர்தான் எங்கள் பிரின்சிபால், தெய்வமுங்க. "மன்னிப்பு" தமிழ்ல அவருக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை.