ஒரு வழியாக வந்து விட்டான் 'எந்திரன்'. எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், அதுக்கு பல படிகள் மேலே சென்று விளம்பரங்கள், அனைத்து ஊடகங்களையும் தன் ஆக்கிரமிப்புக்கு கொண்டு வந்து இதை பார்த்தே ஆக வேண்டும், இதை மட்டுமே பார்க்க வேண்டும், திரைப்படம் என்றால் 'எந்திரன்' என்ற அளவுக்கு திகட்ட வைத்து விட்டார்கள். ரஜினிகாந்த் ரசிகனான எனக்குகூட இந்த ஓவர் டோஸ் வைத்தியம் வெறுத்து போக, "டிக்கட் விலை குறைந்தாலே ஒழிய பார்ப்பதில்லை" என்ற வைராக்கியத்தோடு பொறுமை காத்த எனக்கு, எண்பது ரூபாயில் 'எந்திரன்' நேற்றுதான் அமைந்தது. இப்போது எந்திரனை பற்றி பேசுவோம்.
விஞ்ஞானத்தை அஞ்ஞானம் தொற்றி கொண்டால் என்ன ஆகும்? எந்திரன் ஆகும்.
'ரோபோட்டிக்ஸ்' விஞ்ஞானியான ரஜினியின் பத்து வருட அயராத முயற்சியில் அவதரித்த புத்திரன்தான் 'எந்திரன்'. சொல்லி கொடுத்தவற்றை கன கச்சிதமாக நொடிப்பொழுதில் முடிக்கும் ரோபோ. கண்ணை சற்று மூடிக்கொண்டு உங்களை ஒரு மாவீரனாக, சகலகலா வல்லவனாக நினைத்து பாருங்கள். இப்போது கண்ணை திறந்து எந்திரனை நினைத்து கொள்ளுங்கள். உங்களை விட நூறு மடங்கு பராக்கிரம சாலி இந்த எந்திரன். அந்த பராகிரமசாலியை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தினால் நம்ம பங்காளிகளை பந்தாடிவிடலாம் என்ற நோக்கத்தில் ரஜினி எந்திரனை உருவாக்குகிறார். ஆனால் உள்ளுரிலேய ஒரு பங்காளி இருப்பதை அவர் உணரவில்லை. அந்த பங்காளி (ரஜினியின் மூத்த அதிகாரி) எந்திரனை வெளி நாட்டு பங்காளிகளுக்கு விலை பேச திட்டமிடுகிறார். 'எந்திரன்' ஒரு ஆபத்தான விஷயம், அதை ராணுவத்தில் பயன் படுத்துவது தவறு என்று சாதித்து ரஜினியை (வழக்கம்போல) அழுத்தி வைக்கிறார். எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருமாறு ரஜினியை தூண்டுகிறார். இந்த சதியை உணராத ரஜினி, எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருகிறார். கோபம், துக்கம், காதல், அன்பு, என்று எல்லா உணர்வுகளையும் கற்றுக்கொண்ட எந்திரன், காதல் விஷயத்தில் ரஜினிக்கே போட்டியாக வந்து வில்லனாக மாறுவதுதான் கதையின் சாரம். சங்கர் படம் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. எந்திரனும் அப்படித்தான். இதில் பிரமாண்டம் ஓவர் டோஸ். ரஜினிகாந்த் இருபது வயது குறைவாகதெரிவது சந்தோஷம் தருகிறது. எந்திரன் ரஜினி, விஞ்ஞானி ரஜினியை எல்லா விதத்திலும் மிஞ்சி விடுகிறார். (மூன்று முகம்-அலெக்ஸ் பாண்டியன் போல). ஓடும் ரயிலில் எந்திரன் பறந்து, பறந்து சண்டை போடுவது சூப்பர்ப். சமையல், வீடு வேலை, நடனம், சண்டை, அறிவு என்று அனைத்திலும் எந்திரன் அமர்க்களப்படுத்துகிறான். ஐஸ்வர்யா ராயுக்கு வயது ஆக ஆரம்பித்து விட்டது கொஞ்சம் தெரிகிறது. பாடல்கள், சொல்ல தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து பிடிக்குமோ, என்னவோ? படம் முழுக்க "கிராபிக்ஸ்" மயம். (என் மகன் "இந்த சீன், G.T.A வைஸ் சிட்டி விளையாட்டில் வருகிறது" என்று சொன்னபோது சிரிப்பு வந்தது)
எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்ததால் சில, பல குறைகளை கூறாமல் இருக்க முடியவில்லை. எந்திரனுக்கு "பாட்டரி லோ" வருவது ஏதோ 'நோக்கியா' செல் போன் பாட்டரி போல் சொல்லியிருக்க வேண்டாம். பல வருடங்களாக விண்ணில் 'பாட்டரி லோ' ஆகாமல் சுற்றி வரும் விண்கலங்களை நினைவில் கொண்டிருக்கலாம். க்ளைமாக்ஸ் சண்டையில் "பார்மேஷன்" என்ற கட்டளையில் நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று எந்திரர்கள் தானாக உருவாகி 'அனகோண்டா', 'ஹல்க்', 'டெர்மினேட்டர்' கிளைமாக்ஸ் களை எல்லாம் ஒன்று சேர்த்திருக்க வேண்டாம்.
மொத்தத்தில் எந்திரனுக்காக இயக்குனர் சங்கருக்கு ஒரு ஜே!
முப்பது வயது ரஜினிக்கு ஒரு ஜே!!
பலவருடங்களுக்கு முன்னதாகவே இந்த கதையை உருவாக்கித்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு ஜே!!!
எந்திரன் - அமோக விற்பனை.