Sunday, July 24, 2011

மறுபடியுமா புளியோதரை.......ஐயோ...

புளியோதரையின் முதல் 'போஸ்ட்'டே ரொம்ப கார சாரமா இருந்ததுக்கு காரணம், படத்தை பாருங்க, பொறியர மணல்ல நடந்து?(ஓடி) வந்து மடப்பள்ளி புளியோதரையை மென்று முழுங்கி கொண்டே அசாருதீனை பற்றி எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிதாக வாங்கிய டொயோட்டா காரை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டு நேரம் கழிப்பதற்காக கோவிலுக்கு வந்தேன். அட...ஸ்ரீரங்கம் நிறையவே மாறியிருக்கிறது. தெற்கு வாசலில் முன்னைவிட ட்ராபிக் சீராக உள்ளது. வயோதிகர்களுக்காக (எனக்கு அல்ல) பேட்டரியில் இயங்கும் வண்டி, சன்னதி வரை அழைத்து வந்து விடுகிறது. மதியான வேளையாய் இருந்ததால் கோவிலில் கும்பல் அவ்வளவாக இல்லை. பத்து ரூபாய் டிக்கட் வாங்கி ரங்கநாதனை (வைரமுடியோடு) தரிசித்தேன். திருத்துழாய் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அடுத்து தாயார் சன்னதி. ரோஜாமாலையை வாங்கிக்கொண்டு தாயாரை தரிசனம் செய்துவிட்டு பிராகாரத்தை சுற்றி வந்தேன். 'தன்வந்தரி' சன்னதியில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தபோது புதிதாக? ரெண்டு சன்னதிகள் பள,பளத்ததை பார்க்கும்போதே அர்ச்சகர் 'வாங்கோ..வாங்கோ..வென்று அழைக்க உள்ளே சென்றேன். 'ஆண்டாள் கண்ணாடியறை' சும்மா மினு மினுத்தது. அடுத்தடுத்து 'கோதண்ட ராமர், பட்டாபிஷேக ராமர்' என்று இரண்டு சன்னதிகள் பிரமாதமாய் மின்னின. (இவ்வளவு நாட்கள் இவை எங்கே இருந்தன?) இவை எல்லாவற்றையும் விட கிழக்கு பகுதியில் (நீங்கள் படத்தில் பார்க்கும் இடம்) கால்கள் பொறியும் மணல் பிரதேசம்தான், இப்போது காணவில்லை. (பிளாட் போட்டு விட்டார்களாவென்று நீங்கள் கேலி செய்வது தெரிகிறது) வெயிலிலிருந்து நம்மை காக்கும் விதமாக மேற்கூரை போடப்பட்டிருக்கிறது. தரையை சீரமைதிருக்கிறார்கள். சிமென்ட் போட்டிருக்கிறார்கள். எந்த வித வேதனையுமின்றி நிதானமாக நடந்து மடப்பள்ளிக்கு வந்தேன். மணி ஒன்றாகவே ஒரு புளியோதரை வாங்கி கொறித்து விட்டு வேறு ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பாடு சாப்பிடலாமென்று நினைத்து ஒரு புளியோதரை வாங்கிய எனக்கு மஹா ஆச்சரியம். ஒரு பட்டை சாதம் அளவுக்கு புளியோதரை வாழை இலையில் கொடுத்தார்கள். ஏதோ மீந்துபோன பொருளோ? என்ற சந்தேகத்துடன் ஒரு கவளம் எடுத்து வாயில் போட்டேன். அட.. பிரமாதமாய் இருந்தது.(எழுதும்போதே நாக்கு ஊறுகிறது) அடுத்து ஒரு தயிர் சாதம் வாங்கினேன். இது அதைவிட பிரமாதம். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து ஒரு வாழை இலையில் கொடுத்தார்கள். இருபது ரூபாயில் வயிறு நிரம்பவே கட்டையை கிடைத்த இடம் தேடினேன். கருடாழ்வார் சன்னதி மிகவும் சுத்தமாக இருந்தது. (தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்) கிழக்கு-மேற்காக ஒரு இடத்தை பார்த்து ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து தூங்கி எழுந்தேன். நேரம் மூணரை ஆகவே மீண்டும் சர்வீஸ் செண்டர் சென்று காரை எடுத்துக்கொண்டு ஆச்சரியங்களோடு ஊர் வந்து சேர்ந்தேன். முதல்வர் தொகுதிதான் என்றாலும் செயல் புரிந்த அனைவருக்கும் நன்றிகள்.