Sunday, January 10, 2010

அட்வைஸ் பண்றாங்கோ, அட்வைஸ்....

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Saturday, October 17, 2009

கர-கர, மொர-மொர, ட்டப்....

தீபாவளின்னாலே, பலகாரம்தான், பேஷ்,பேஷ் ...ரொம்ப நன்னாருக்கே!

இப்போ ரவா லாடு, மைசூர்பா, முறுக்கு, தேன்குழல், ஓலை பகோடா, முந்திரி கேக் இதெல்லாம் எப்படி பண்ணலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி என்ன பண்ணலாம் என்பதை பார்த்து விடலாம்.

முதலில் மைசூர்பா: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மெல்ல அழுத்தாமல் மைசூர்பாவை எடுக்கவும். பிறகு எடுத்த மைசூர்பாவை யாரும் பார்க்காத வண்ணம் லேசாக தூக்கி, நாக்கில் வைத்து முதல் பதத்தை ருசித்து விடவும். பின்பு (இப்போ யார் பார்த்தாலும் பரவாயில்லை) மைசூர்பாவை நாக்கால் உள்ளிழுத்து முன் பற்கள் அதிகம் படாமல் உதடுகளால் கடித்து உமிழ்நீரைக்கொண்டு கரைக்கவும். கரைசலை மெல்ல நாக்கினுள் ஓடவிட்டு, விழுங்கவும். இப்போது தொண்டைகுழாய் முழுவதும் இனிப்பு பரவுவதை கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசிக்கவும்.

அடுத்து ரவா லாடு: ரவா லாடையும் அழுத்தாமல் மூன்று விரல்களால் எடுக்கவும். அதை லேசாக மூக்கருகில் கொண்டு சென்று, ஏலக்காய் வாசனையை முகரவும். பின்பு வாயை தேவைக்கேற்ப திறந்து கொண்டு ரவா லாடை பற்களுக்கு இடையில் வைத்து லேசாக கடிக்கவும். கடிக்கும் போது ரவா லாடு தூள்கள் வெளியில் வந்து விழாமல் இருக்க மிக லாவகமாக பிடிக்கவும். வாய் கொள்ளும் அளவுக்கு மட்டும் ரவா லாடை கடிக்கவும். இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளேயே நாக்கை உபயோகப்படுத்தி அசை போடவும். மிக முக்கியமாக உங்களுக்கு அருகில் ஜோக்கு பேர்வழிகள் இல்லாமல் பார்த்து கொள்ளுவது நல்லது. ஏனெனில், அவர் அடித்த ஜோக்குக்கு, நீங்கள் "ப்ப்ர்ர்.." என்று சிரிக்க போக எதிரில் நிற்பவர் மூஞ்சியில் விபூதி அபிஷேகம் நடக்க வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.

அடுத்தது முறுக்கு, ஓலை பகோடா, தேன் குழல்: இவற்றை விரல்களில் எடுத்து ரசனையோடு தின்றால் நாகரீகமாக இருக்கும். பறக்காவெட்டி போல் உள்ளங்கையில் அள்ளி, வாய்க்குள் கொட்டிக்கொண்டு, கர-கர-கரவென்று கான்கிரீட் மெஷின் போல அரைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மற்றபடி எங்கே சாப்பிடலாம் என்பதை அதனதன் ருசியை வைத்து, டி.வீக்கு முன்னால் அமர்ந்தபடியோ, போகும்போது-வரும்போதோ, "ரெபிரிஜிறேட்டரை" திறந்து பார்த்து எதுவும் கிடைக்காமல் போகும்போது தின்பதற்கோ, நிஜமாகவே ருசியாக இருப்பின், ஆர-அமர பலகாரங்களோடு சேர்த்தோ சாப்பிடலாம்.

இனிமேல் செய்முறை பற்றி பார்ப்போம்.
என்னத்துக்கு இந்த அனாவசிய வேலை எல்லாம். பேசாமல் வீட்டில் செய்த பலகாரங்களை சத்தம் போடாமல் தின்று விட்டு அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

Sunday, October 11, 2009

யம்மாடியோவ் - 40 லட்சமா..........!!!!!!!!!!!!!!


சென்னை சில்க்ஸின் நாற்பது லட்ச ரூபாய் புடவை.

"ஏனுங்க ! எங்க ஊட்டுக்கார அம்மாவுக்கும் இத்த கட்டிக்கணும்னு ஆசையாம். ஒரு தடவ கட்டிப்பாத்து ஒரே ஒரு போட்டோ எடுக்கணும். "ட்ரையல்" ரூம் எங்க இருக்கு?"

கூட வந்த தம்பி:

"அண்ணே, இந்த புடவைய அண்ணி கட்டட்டும், நானு.......... ஹீ! ஹீ!!

Sunday, October 4, 2009

சிவகாசிக்கே வேட்டு....

தீபாவளி என்றாலே புது ஆடைகள், புது விதமான பட்டாசுகள். சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூடி கொளுத்தும் பட்டாசும், மத்தாப்புகளும் கண்ணுக்கு விருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வகையில் பட்டாசு என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரும் ஊர்தான் சிவகாசி. ஆனால் சிவகாசிக்கே வேட்டு வைக்க வருகிறார்கள் நம்ம பங்காளிகள். பங்காளிகள் என்றதும் பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறதா? அதை கொஞ்சம் மாத்திக்குங்க. புது பங்காளிகள் யாருன்னு தெரியுதா? அட, சீனா தாங்க. எலக்ட்ரோனிக்ஸ், அப்புறம் ஆட்டோமொபைல், பிறகு செல் போன், இப்போது பட்டாசு (சீன வெடிகள் ஒன்றும் புதியவை அல்ல) என்று கொஞ்சம் கொஞ்சமாக நமது பிழைப்பில் மண்ணைப்போட வந்து இறங்குகிறது. ஏறத்தாழ நூறு கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசுகள் சீனாவிலிருந்து இறங்கியிருப்பதாக 'நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. சிவகாசிப்பட்டாசின் மொத்த விற்பனையே இந்த அளவு இருக்குமா என்பது சந்தேகம்தான். சீனாவின் இந்த செயல் நம் பிழைப்பில் மண்ணைப்போடும் வேலையே. இந்த செயலை சீன மிகத்திறமையாக செய்து வருகிறது. நுகர்வோரான நமக்கு இது பற்றியெல்லாம் கவலை இருப்பதில்லை. 'விலை மலிவாக கிடைக்கிறதா, வாங்கித்தள்ளு' என்று இருந்தால் ஏமாறப்போவது நாம்தான். நுகர்வோர்கள் தாமாக முன்வந்து சுதேசியை கடைபிடித்தலோழிய இந்த நிலையை மாற்ற முடியாது. இறக்குமதிப்பொருட்களை வாங்கக்கூடாது என்பதில்லை, இறக்குமதிபொருட்களால் தான் நம் பொருட்களின் தரம் உயர்ந்திருக்கிறது. போட்டியில்தான் தரம் உயரும். ஆனால் சீனாவின் செயல் போட்டியை தரவில்லை. ஒரு பொருளாதாரத்தை நசுக்கும் செயல். ஆகவே நாம் எச்சரிக்கையாக இல்லையெனில் இந்த செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் இதுபோன்ற மறைமுக போட்டியில் இறங்கவேண்டும். குறிப்பாக, சினிமா, மற்றும் மீடியா துறைகளில் இந்த முறையை கைப்பற்றலாம். நம் சினிமாத்துறை சீன மக்களை கவரும் விதமாக இருக்க வேண்டும். சீன மொழியில் நம் திரைப்படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிடலாம். ஏற்கனவே ஜப்பானியர்களுக்கு நம் திரைப்படங்கள் மீது மோகம் அதிகம். இதை சீனாவிலும் முயன்று பார்க்கவேண்டும். ஐஸ்வர்யா ராயின் திரைப்படங்கள் சீனாவில் பிரபலம் அடைந்துள்ளன. முள்ளை, முள்ளால்தான் அகற்ற முடியும்.