Saturday, October 17, 2009

கர-கர, மொர-மொர, ட்டப்....

தீபாவளின்னாலே, பலகாரம்தான், பேஷ்,பேஷ் ...ரொம்ப நன்னாருக்கே!

இப்போ ரவா லாடு, மைசூர்பா, முறுக்கு, தேன்குழல், ஓலை பகோடா, முந்திரி கேக் இதெல்லாம் எப்படி பண்ணலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி என்ன பண்ணலாம் என்பதை பார்த்து விடலாம்.

முதலில் மைசூர்பா: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மெல்ல அழுத்தாமல் மைசூர்பாவை எடுக்கவும். பிறகு எடுத்த மைசூர்பாவை யாரும் பார்க்காத வண்ணம் லேசாக தூக்கி, நாக்கில் வைத்து முதல் பதத்தை ருசித்து விடவும். பின்பு (இப்போ யார் பார்த்தாலும் பரவாயில்லை) மைசூர்பாவை நாக்கால் உள்ளிழுத்து முன் பற்கள் அதிகம் படாமல் உதடுகளால் கடித்து உமிழ்நீரைக்கொண்டு கரைக்கவும். கரைசலை மெல்ல நாக்கினுள் ஓடவிட்டு, விழுங்கவும். இப்போது தொண்டைகுழாய் முழுவதும் இனிப்பு பரவுவதை கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசிக்கவும்.

அடுத்து ரவா லாடு: ரவா லாடையும் அழுத்தாமல் மூன்று விரல்களால் எடுக்கவும். அதை லேசாக மூக்கருகில் கொண்டு சென்று, ஏலக்காய் வாசனையை முகரவும். பின்பு வாயை தேவைக்கேற்ப திறந்து கொண்டு ரவா லாடை பற்களுக்கு இடையில் வைத்து லேசாக கடிக்கவும். கடிக்கும் போது ரவா லாடு தூள்கள் வெளியில் வந்து விழாமல் இருக்க மிக லாவகமாக பிடிக்கவும். வாய் கொள்ளும் அளவுக்கு மட்டும் ரவா லாடை கடிக்கவும். இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளேயே நாக்கை உபயோகப்படுத்தி அசை போடவும். மிக முக்கியமாக உங்களுக்கு அருகில் ஜோக்கு பேர்வழிகள் இல்லாமல் பார்த்து கொள்ளுவது நல்லது. ஏனெனில், அவர் அடித்த ஜோக்குக்கு, நீங்கள் "ப்ப்ர்ர்.." என்று சிரிக்க போக எதிரில் நிற்பவர் மூஞ்சியில் விபூதி அபிஷேகம் நடக்க வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.

அடுத்தது முறுக்கு, ஓலை பகோடா, தேன் குழல்: இவற்றை விரல்களில் எடுத்து ரசனையோடு தின்றால் நாகரீகமாக இருக்கும். பறக்காவெட்டி போல் உள்ளங்கையில் அள்ளி, வாய்க்குள் கொட்டிக்கொண்டு, கர-கர-கரவென்று கான்கிரீட் மெஷின் போல அரைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மற்றபடி எங்கே சாப்பிடலாம் என்பதை அதனதன் ருசியை வைத்து, டி.வீக்கு முன்னால் அமர்ந்தபடியோ, போகும்போது-வரும்போதோ, "ரெபிரிஜிறேட்டரை" திறந்து பார்த்து எதுவும் கிடைக்காமல் போகும்போது தின்பதற்கோ, நிஜமாகவே ருசியாக இருப்பின், ஆர-அமர பலகாரங்களோடு சேர்த்தோ சாப்பிடலாம்.

இனிமேல் செய்முறை பற்றி பார்ப்போம்.
என்னத்துக்கு இந்த அனாவசிய வேலை எல்லாம். பேசாமல் வீட்டில் செய்த பலகாரங்களை சத்தம் போடாமல் தின்று விட்டு அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

Sunday, October 11, 2009

யம்மாடியோவ் - 40 லட்சமா..........!!!!!!!!!!!!!!


சென்னை சில்க்ஸின் நாற்பது லட்ச ரூபாய் புடவை.

"ஏனுங்க ! எங்க ஊட்டுக்கார அம்மாவுக்கும் இத்த கட்டிக்கணும்னு ஆசையாம். ஒரு தடவ கட்டிப்பாத்து ஒரே ஒரு போட்டோ எடுக்கணும். "ட்ரையல்" ரூம் எங்க இருக்கு?"

கூட வந்த தம்பி:

"அண்ணே, இந்த புடவைய அண்ணி கட்டட்டும், நானு.......... ஹீ! ஹீ!!

Sunday, October 4, 2009

சிவகாசிக்கே வேட்டு....

தீபாவளி என்றாலே புது ஆடைகள், புது விதமான பட்டாசுகள். சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூடி கொளுத்தும் பட்டாசும், மத்தாப்புகளும் கண்ணுக்கு விருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த வகையில் பட்டாசு என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரும் ஊர்தான் சிவகாசி. ஆனால் சிவகாசிக்கே வேட்டு வைக்க வருகிறார்கள் நம்ம பங்காளிகள். பங்காளிகள் என்றதும் பாகிஸ்தான் நினைவுக்கு வருகிறதா? அதை கொஞ்சம் மாத்திக்குங்க. புது பங்காளிகள் யாருன்னு தெரியுதா? அட, சீனா தாங்க. எலக்ட்ரோனிக்ஸ், அப்புறம் ஆட்டோமொபைல், பிறகு செல் போன், இப்போது பட்டாசு (சீன வெடிகள் ஒன்றும் புதியவை அல்ல) என்று கொஞ்சம் கொஞ்சமாக நமது பிழைப்பில் மண்ணைப்போட வந்து இறங்குகிறது. ஏறத்தாழ நூறு கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசுகள் சீனாவிலிருந்து இறங்கியிருப்பதாக 'நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. சிவகாசிப்பட்டாசின் மொத்த விற்பனையே இந்த அளவு இருக்குமா என்பது சந்தேகம்தான். சீனாவின் இந்த செயல் நம் பிழைப்பில் மண்ணைப்போடும் வேலையே. இந்த செயலை சீன மிகத்திறமையாக செய்து வருகிறது. நுகர்வோரான நமக்கு இது பற்றியெல்லாம் கவலை இருப்பதில்லை. 'விலை மலிவாக கிடைக்கிறதா, வாங்கித்தள்ளு' என்று இருந்தால் ஏமாறப்போவது நாம்தான். நுகர்வோர்கள் தாமாக முன்வந்து சுதேசியை கடைபிடித்தலோழிய இந்த நிலையை மாற்ற முடியாது. இறக்குமதிப்பொருட்களை வாங்கக்கூடாது என்பதில்லை, இறக்குமதிபொருட்களால் தான் நம் பொருட்களின் தரம் உயர்ந்திருக்கிறது. போட்டியில்தான் தரம் உயரும். ஆனால் சீனாவின் செயல் போட்டியை தரவில்லை. ஒரு பொருளாதாரத்தை நசுக்கும் செயல். ஆகவே நாம் எச்சரிக்கையாக இல்லையெனில் இந்த செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் இதுபோன்ற மறைமுக போட்டியில் இறங்கவேண்டும். குறிப்பாக, சினிமா, மற்றும் மீடியா துறைகளில் இந்த முறையை கைப்பற்றலாம். நம் சினிமாத்துறை சீன மக்களை கவரும் விதமாக இருக்க வேண்டும். சீன மொழியில் நம் திரைப்படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிடலாம். ஏற்கனவே ஜப்பானியர்களுக்கு நம் திரைப்படங்கள் மீது மோகம் அதிகம். இதை சீனாவிலும் முயன்று பார்க்கவேண்டும். ஐஸ்வர்யா ராயின் திரைப்படங்கள் சீனாவில் பிரபலம் அடைந்துள்ளன. முள்ளை, முள்ளால்தான் அகற்ற முடியும்.

Monday, September 28, 2009

ஞானப்பழம்

பழம் நீயப்பா,
ஞானப்பழம் நீயப்பா,
தமிழ்ஞானப்பழம் நீயப்பா.
ஆறுவது சினம்
கூறுவது தமிழ்
அறியாத சிறுவனல்ல நான்.
கள்ளமில்லா சிரிப்பிலே
கவலைதனை களைய வந்த
கனியவனே நான்,
இனியவனே நான்.

Sunday, September 20, 2009

ரெங்குடுவும், ராக்காயி மெஸ்ஸும்

மணி ஒன்றரை அடித்ததும், வயிற்றில் மணி அடிக்க நானும் விஸ்வேஸ்வரனும் ராக்காயி மெஸ்ஸுக்கு கிளம்பி ரூமிலிருந்து கீழே இறங்கி வந்து ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தோம். வெளியில் சற்று மழை தூறல் அதிகமாக இருக்கவே ஹோட்டல் அருகில் இருந்த அக்கா பெட்டிக்கடையின் சாக்குப்பை ஷாமியானாவில் ஒதுங்கினோம். ஒரு பக்கம் மழை இரைச்சல், வயிற்றுக்குள் பசியின் இரைச்சல். பத்து நிமிடமாக நின்ற விஸ்வேஸ்வரன் பொறுமை இழக்கவே தன்னை அறியாமல் பாட்டுப்பாட துவங்கினான்.
"ஆத்தாடி பாவாட காத்தாட"
என்று ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்தான். பெட்டிக்கடைக்குள்ளேயிருந்து அக்கா சிக்னல் தர, அத்திம்பேர் (அதான், அக்கா வீட்டுக்காரர்) தலையை தூக்கி எங்களை பார்த்து,
"எவண்டா அவன்" என்று ஏக வசனத்தில் தொடங்கி, ஏகப்பட்ட சென்னை செந்தமிழில் வகுந்து தள்ள ஆரம்பித்தார். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட விஸ்வேஸ்வரன் பதிலுக்கு "யோவ்" என்றதுதான் தாமதம், தர்ம அடி தரத்தயாராக அத்திம்பேர், அண்ணன்கள் என்று ஒரு படையே தயாராகவே, அடுத்த நொடி விஸ்வேஸ்வரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பறந்தேன், ராக்காயி மெஸ்ஸுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வேஸ்வரனை தேற்றினேன். தேம்பி அழாத குழந்தையாக தலையை குனிந்தபடியே ரொம்ப நேரம் சாப்பாட்டு இலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். இதெல்லாம் பிரம்மச்சாரிக்கு சகஜம் தான் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்டான். திரும்பி வர தைரியம் இல்லாமல், ஊரை சுற்றி விட்டு ராத்திரி வந்து பார்த்த போது யாரோ ஒரு குடிகாரன் அக்காவை ஏக வசனத்தில் சாடி கொண்டிருந்தான். அத்திம்பேர் அவனை பார்த்து இளித்து கொண்டிருந்தார். இதுவும் பிரும்மசாரிகளுக்கு சகஜம்தான்.
சில சமயங்களில் உலகத்தின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்வதற்கு வெகு நேரங்கள் ஆகும்.
இப்படியாக ரெங்குடுவின் சென்னை வாழ்க்கை பல வித மறக்க முடியாத நிகழ்வுகளுடன் பறந்தது. சென்னையை பொறுத்தவரை ஒரு மாபெரும் உண்மையை தெரிந்து கொண்டேன். இங்கே ஐந்நூறு ரூபாய் சம்பளத்திலும் உல்லாசமாக இருக்கலாம், ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அழுது கொண்டும் இருக்கலாம். சாய்ஸ் நமது கையில்தான் இருக்கிறது. இரண்டு வருட அனுபவங்களுடன் சென்னைக்கு "பய், பய்" சொல்லி விட்டு நெய்வேலிக்கு வந்து சேர்ந்தேன். ஒரு காஸ்மோபோலிட்டன் சிட்டியிலிருந்து, மினி இந்தியாவிற்கு வந்த விஷயங்கள் வரும் பதிவுகளில்.
(தொடரும்)

Saturday, September 19, 2009

ஆதவன் Vs வேட்டைக்காரன் - சினிமா லொள்ளு

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல........