Sunday, March 23, 2014

கால் டாக்சி எனக்கொரு அரச மரம்

புளியோதரையை சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுச்சு. இல்லையா, அதனாலதான் மெனுவை மாத்தி பார்க்கலாமேன்னு கொஞ்சமே கொஞ்சம் (நெஜமாவே) வெண் பொங்கலை சாப்பிட்டு விட்டு கால் டாக்சியில் சிங்காநல்லூரில் இருந்து எட்டிமடை (அமிர்தா காலேஜ் ) வரை பயணித்தேன். சுமார் முப்பது நிமிஷப்பயண ம்தான்  என்றாலும் "ஆஹா" என்ன ஒரு அற்புதமான பயணம். நேஷனல் ஹை வே, மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமான காற்று, இரண்டு புறமும் இயற்கையின் எழில் மிகு காட்சிகள். டிரைவரின் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு இலேசான கிறக்கம்-கண்களில். ஓரப்பார்வையில் டிரைவரை கவனித்தேன். பயங்கர அதிர்ச்சி, டிரைவர் நன்றாக கண்களை மூடிக்கொண்டே கார் ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னால் திரும்பிப்பார்த்தால் என் மனைவியும், மகனும் ஜன்னல் வழியாக அழகை ரசித்துக்கொண்டிருந்தார்கள். எதிரே "வால்வோ" பேருந்து ஒன்று அலறியபடி வரவே, திடுக்கிட்டு விழித்த டிரைவர் சில நொடிகளில் மீண்டும் சயனத்துக்கு போகவே, நான் மெல்ல கனைத்துக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வரவே,  ஒரு வழியாக காலேஜ் வந்து சேர்ந்தோம். டிரைவரை மனதுக்குள்ளே திட்டித்தீர்த்தேன் "இரவில் சரியாக தூங்காமல் நம் உயிரை வாங்குவதற்கென்றே வருகிறார்கள். கொஞ்சம் தவறியிருந்தால் எங்கள் அனைவரின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும்" என்று பல விதத்தில் எண்ணிக்கொண்டே அமிர்தா காலேஜில் இருக்கும் அந்த அரச மரத்தின் அடியில் இருந்த மேடையில் அமர்ந்தேன். அதற்குள் என்னுடைய மகளும் வந்து  சேரவே நால்வரும் அளவளாவ ஆரம்பித்தோம். நான் மீண்டும் கால் டாக்சியை நினைவுக்கு கொண்டு வந்து டிரைவரை திட்டி விட்டு அரச மரத்தின் இதமான தென்றலில் மேலான காற்றில் இளைப்பாறினேன். சிறிது நேரத்தில் காலையில் உண்ட பொங்கலின் மகிமையாலும் அரச மர தென்றலின்   தழுவலினாலும் கண்கள் சொருகிக்கொண்டு வரவே மேடையில் நீட்டிப்படுத்து சற்றே அயர்ந்து விட்டேன். 
அரச மரம் மரங்களிலேயே சிறந்ததென்று 'பகவத் கீதையில்' கிருஷ்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிர்ரர் அல்லவா? மேலும், அஸ்வத்-நாராயணன் என்று அரச மரத்தை கொண்டாடுகிறார்கள். அப்படீபட்ட மரத்தின் நிழலில் உறங்கினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது. என் குறட்டை சப்தம் 'ஹாஸ்டல்' வரை கேட்டது என்பதை பிறகு அறிந்து கொண்டேன். ஒரு மணி நேர உறக்கத்துக்கு பின் எழுந்தநான் மீண்டும் அந்த கால் டாக்சி டிரைவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த முறை கோபம் வர வில்லை. மாறாக அவர்மேல் பரிதாபமே வந்தது. 

Saturday, August 20, 2011

அம்மாடியோவ்............



சும்மா எழுதி வச்சுக்குவோம், க்விஸ் போட்டிக்காவது உபயோகப்படாதா?....ம்ஹும்..

Sunday, July 24, 2011

மறுபடியுமா புளியோதரை.......ஐயோ...

புளியோதரையின் முதல் 'போஸ்ட்'டே ரொம்ப கார சாரமா இருந்ததுக்கு காரணம், படத்தை பாருங்க, பொறியர மணல்ல நடந்து?(ஓடி) வந்து மடப்பள்ளி புளியோதரையை மென்று முழுங்கி கொண்டே அசாருதீனை பற்றி எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிதாக வாங்கிய டொயோட்டா காரை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டு நேரம் கழிப்பதற்காக கோவிலுக்கு வந்தேன். அட...ஸ்ரீரங்கம் நிறையவே மாறியிருக்கிறது. தெற்கு வாசலில் முன்னைவிட ட்ராபிக் சீராக உள்ளது. வயோதிகர்களுக்காக (எனக்கு அல்ல) பேட்டரியில் இயங்கும் வண்டி, சன்னதி வரை அழைத்து வந்து விடுகிறது. மதியான வேளையாய் இருந்ததால் கோவிலில் கும்பல் அவ்வளவாக இல்லை. பத்து ரூபாய் டிக்கட் வாங்கி ரங்கநாதனை (வைரமுடியோடு) தரிசித்தேன். திருத்துழாய் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அடுத்து தாயார் சன்னதி. ரோஜாமாலையை வாங்கிக்கொண்டு தாயாரை தரிசனம் செய்துவிட்டு பிராகாரத்தை சுற்றி வந்தேன். 'தன்வந்தரி' சன்னதியில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தபோது புதிதாக? ரெண்டு சன்னதிகள் பள,பளத்ததை பார்க்கும்போதே அர்ச்சகர் 'வாங்கோ..வாங்கோ..வென்று அழைக்க உள்ளே சென்றேன். 'ஆண்டாள் கண்ணாடியறை' சும்மா மினு மினுத்தது. அடுத்தடுத்து 'கோதண்ட ராமர், பட்டாபிஷேக ராமர்' என்று இரண்டு சன்னதிகள் பிரமாதமாய் மின்னின. (இவ்வளவு நாட்கள் இவை எங்கே இருந்தன?) இவை எல்லாவற்றையும் விட கிழக்கு பகுதியில் (நீங்கள் படத்தில் பார்க்கும் இடம்) கால்கள் பொறியும் மணல் பிரதேசம்தான், இப்போது காணவில்லை. (பிளாட் போட்டு விட்டார்களாவென்று நீங்கள் கேலி செய்வது தெரிகிறது) வெயிலிலிருந்து நம்மை காக்கும் விதமாக மேற்கூரை போடப்பட்டிருக்கிறது. தரையை சீரமைதிருக்கிறார்கள். சிமென்ட் போட்டிருக்கிறார்கள். எந்த வித வேதனையுமின்றி நிதானமாக நடந்து மடப்பள்ளிக்கு வந்தேன். மணி ஒன்றாகவே ஒரு புளியோதரை வாங்கி கொறித்து விட்டு வேறு ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பாடு சாப்பிடலாமென்று நினைத்து ஒரு புளியோதரை வாங்கிய எனக்கு மஹா ஆச்சரியம். ஒரு பட்டை சாதம் அளவுக்கு புளியோதரை வாழை இலையில் கொடுத்தார்கள். ஏதோ மீந்துபோன பொருளோ? என்ற சந்தேகத்துடன் ஒரு கவளம் எடுத்து வாயில் போட்டேன். அட.. பிரமாதமாய் இருந்தது.(எழுதும்போதே நாக்கு ஊறுகிறது) அடுத்து ஒரு தயிர் சாதம் வாங்கினேன். இது அதைவிட பிரமாதம். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து ஒரு வாழை இலையில் கொடுத்தார்கள். இருபது ரூபாயில் வயிறு நிரம்பவே கட்டையை கிடைத்த இடம் தேடினேன். கருடாழ்வார் சன்னதி மிகவும் சுத்தமாக இருந்தது. (தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்) கிழக்கு-மேற்காக ஒரு இடத்தை பார்த்து ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து தூங்கி எழுந்தேன். நேரம் மூணரை ஆகவே மீண்டும் சர்வீஸ் செண்டர் சென்று காரை எடுத்துக்கொண்டு ஆச்சரியங்களோடு ஊர் வந்து சேர்ந்தேன். முதல்வர் தொகுதிதான் என்றாலும் செயல் புரிந்த அனைவருக்கும் நன்றிகள்.

Sunday, April 10, 2011

ம்ஹூம்... தேர்தல் பெருமூச்சு!



ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்... குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.ஆனால்... இன்று..அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போககையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள். மீண்டும் உங்கள் நினைவிற்கு..குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது. -இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. -TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன. இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு) அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??