புளியோதரையை சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுச்சு. இல்லையா, அதனாலதான் மெனுவை மாத்தி பார்க்கலாமேன்னு கொஞ்சமே கொஞ்சம் (நெஜமாவே) வெண் பொங்கலை சாப்பிட்டு விட்டு கால் டாக்சியில் சிங்காநல்லூரில் இருந்து எட்டிமடை (அமிர்தா காலேஜ் ) வரை பயணித்தேன். சுமார் முப்பது நிமிஷப்பயண ம்தான் என்றாலும் "ஆஹா" என்ன ஒரு அற்புதமான பயணம். நேஷனல் ஹை வே, மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமான காற்று, இரண்டு புறமும் இயற்கையின் எழில் மிகு காட்சிகள். டிரைவரின் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு இலேசான கிறக்கம்-கண்களில். ஓரப்பார்வையில் டிரைவரை கவனித்தேன். பயங்கர அதிர்ச்சி, டிரைவர் நன்றாக கண்களை மூடிக்கொண்டே கார் ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னால் திரும்பிப்பார்த்தால் என் மனைவியும், மகனும் ஜன்னல் வழியாக அழகை ரசித்துக்கொண்டிருந்தார்கள். எதிரே "வால்வோ" பேருந்து ஒன்று அலறியபடி வரவே, திடுக்கிட்டு விழித்த டிரைவர் சில நொடிகளில் மீண்டும் சயனத்துக்கு போகவே, நான் மெல்ல கனைத்துக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வரவே, ஒரு வழியாக காலேஜ் வந்து சேர்ந்தோம். டிரைவரை மனதுக்குள்ளே திட்டித்தீர்த்தேன் "இரவில் சரியாக தூங்காமல் நம் உயிரை வாங்குவதற்கென்றே வருகிறார்கள். கொஞ்சம் தவறியிருந்தால் எங்கள் அனைவரின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும்" என்று பல விதத்தில் எண்ணிக்கொண்டே அமிர்தா காலேஜில் இருக்கும் அந்த அரச மரத்தின் அடியில் இருந்த மேடையில் அமர்ந்தேன். அதற்குள் என்னுடைய மகளும் வந்து சேரவே நால்வரும் அளவளாவ ஆரம்பித்தோம். நான் மீண்டும் கால் டாக்சியை நினைவுக்கு கொண்டு வந்து டிரைவரை திட்டி விட்டு அரச மரத்தின் இதமான தென்றலில் மேலான காற்றில் இளைப்பாறினேன். சிறிது நேரத்தில் காலையில் உண்ட பொங்கலின் மகிமையாலும் அரச மர தென்றலின் தழுவலினாலும் கண்கள் சொருகிக்கொண்டு வரவே மேடையில் நீட்டிப்படுத்து சற்றே அயர்ந்து விட்டேன்.
அரச மரம் மரங்களிலேயே சிறந்ததென்று 'பகவத் கீதையில்' கிருஷ்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிர்ரர் அல்லவா? மேலும், அஸ்வத்-நாராயணன் என்று அரச மரத்தை கொண்டாடுகிறார்கள். அப்படீபட்ட மரத்தின் நிழலில் உறங்கினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது. என் குறட்டை சப்தம் 'ஹாஸ்டல்' வரை கேட்டது என்பதை பிறகு அறிந்து கொண்டேன். ஒரு மணி நேர உறக்கத்துக்கு பின் எழுந்தநான் மீண்டும் அந்த கால் டாக்சி டிரைவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். ஆனால் இந்த முறை கோபம் வர வில்லை. மாறாக அவர்மேல் பரிதாபமே வந்தது.
No comments:
Post a Comment