Monday, September 28, 2009

ஞானப்பழம்

பழம் நீயப்பா,
ஞானப்பழம் நீயப்பா,
தமிழ்ஞானப்பழம் நீயப்பா.
ஆறுவது சினம்
கூறுவது தமிழ்
அறியாத சிறுவனல்ல நான்.
கள்ளமில்லா சிரிப்பிலே
கவலைதனை களைய வந்த
கனியவனே நான்,
இனியவனே நான்.

Sunday, September 20, 2009

ரெங்குடுவும், ராக்காயி மெஸ்ஸும்

மணி ஒன்றரை அடித்ததும், வயிற்றில் மணி அடிக்க நானும் விஸ்வேஸ்வரனும் ராக்காயி மெஸ்ஸுக்கு கிளம்பி ரூமிலிருந்து கீழே இறங்கி வந்து ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தோம். வெளியில் சற்று மழை தூறல் அதிகமாக இருக்கவே ஹோட்டல் அருகில் இருந்த அக்கா பெட்டிக்கடையின் சாக்குப்பை ஷாமியானாவில் ஒதுங்கினோம். ஒரு பக்கம் மழை இரைச்சல், வயிற்றுக்குள் பசியின் இரைச்சல். பத்து நிமிடமாக நின்ற விஸ்வேஸ்வரன் பொறுமை இழக்கவே தன்னை அறியாமல் பாட்டுப்பாட துவங்கினான்.
"ஆத்தாடி பாவாட காத்தாட"
என்று ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்தான். பெட்டிக்கடைக்குள்ளேயிருந்து அக்கா சிக்னல் தர, அத்திம்பேர் (அதான், அக்கா வீட்டுக்காரர்) தலையை தூக்கி எங்களை பார்த்து,
"எவண்டா அவன்" என்று ஏக வசனத்தில் தொடங்கி, ஏகப்பட்ட சென்னை செந்தமிழில் வகுந்து தள்ள ஆரம்பித்தார். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட விஸ்வேஸ்வரன் பதிலுக்கு "யோவ்" என்றதுதான் தாமதம், தர்ம அடி தரத்தயாராக அத்திம்பேர், அண்ணன்கள் என்று ஒரு படையே தயாராகவே, அடுத்த நொடி விஸ்வேஸ்வரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பறந்தேன், ராக்காயி மெஸ்ஸுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வேஸ்வரனை தேற்றினேன். தேம்பி அழாத குழந்தையாக தலையை குனிந்தபடியே ரொம்ப நேரம் சாப்பாட்டு இலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். இதெல்லாம் பிரம்மச்சாரிக்கு சகஜம் தான் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்டான். திரும்பி வர தைரியம் இல்லாமல், ஊரை சுற்றி விட்டு ராத்திரி வந்து பார்த்த போது யாரோ ஒரு குடிகாரன் அக்காவை ஏக வசனத்தில் சாடி கொண்டிருந்தான். அத்திம்பேர் அவனை பார்த்து இளித்து கொண்டிருந்தார். இதுவும் பிரும்மசாரிகளுக்கு சகஜம்தான்.
சில சமயங்களில் உலகத்தின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்வதற்கு வெகு நேரங்கள் ஆகும்.
இப்படியாக ரெங்குடுவின் சென்னை வாழ்க்கை பல வித மறக்க முடியாத நிகழ்வுகளுடன் பறந்தது. சென்னையை பொறுத்தவரை ஒரு மாபெரும் உண்மையை தெரிந்து கொண்டேன். இங்கே ஐந்நூறு ரூபாய் சம்பளத்திலும் உல்லாசமாக இருக்கலாம், ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அழுது கொண்டும் இருக்கலாம். சாய்ஸ் நமது கையில்தான் இருக்கிறது. இரண்டு வருட அனுபவங்களுடன் சென்னைக்கு "பய், பய்" சொல்லி விட்டு நெய்வேலிக்கு வந்து சேர்ந்தேன். ஒரு காஸ்மோபோலிட்டன் சிட்டியிலிருந்து, மினி இந்தியாவிற்கு வந்த விஷயங்கள் வரும் பதிவுகளில்.
(தொடரும்)

Saturday, September 19, 2009

ஆதவன் Vs வேட்டைக்காரன் - சினிமா லொள்ளு

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல........



Thursday, September 10, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்



ஆறேகால் மணி காட்சிக்கு ஐந்தரை மணிக்கு அவசரம் அவசரமாக போய் சேர்ந்தேன். தியேட்டர் வாசலில் இரண்டு பேர் வெளிப்புறத்தை ரொம்ப கவலையாக பார்த்துக் கொண்டிருக்கவே யார் என்று உற்று பார்த்தேன். வேறு யாருமில்லை, அவர்கள்தான் தியேட்டர் முதலாளியும், மேனேஜரும். சற்றே உள்ளே நுழைந்து எட்டி பார்த்தேன். யாரோ இரண்டு பேர் தியேட்டர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள். "திரைக்கு வந்து சில நாட்களே ஆன " படத்துக்கு ஏற்பட்ட நிலைதான். எங்கள் ஊரில் இதெல்லாம் சகஜம். சரி விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வழியாக நாற்பது, ஐம்பது பேர் தேற, படத்தை திரையிட்டார்கள்.

பிரிதிவிராஜ், ஒரு ஐ.டி கம்பெனியின் சி.ஈ.ஓ கணக்காக பிசினெஸ் க்ளாசில் பிளைட்டில் வருகிறார். அருகில் அமர்ந்து வந்தவர் சும்மா இல்லாமல் இவரிடம் அளவளாவ உடனே பிளாஷ் பேக்கிற்கு போகிறது கதை. மீண்டும், மீண்டும், மீண்டும், ஒரு காலேஜ் கதை. காலேஜில் படிப்பைத்தவிர மற்ற எல்லா விஷயங்களும் நடக்கிறது. பிரிதிவிராஜ் டான்ஸ் ஆடுகிறார், சண்டை போடுகிறார், நரம்பு புடைக்க வீர வசனங்கள் பேசுகிறார், வழக்கம் போல எதிரிகளை சம்பாதித்து கொள்கிறார். எம்.எல்.ஏ மகளாக பிரியா மணி ஆண் குரலில் வீராப்பு பேசுகிறார். பின்னர் பிரிதிவிராஜ் எப்போதோ பொறுக்கி எடுத்த தன் போட்டோவை பார்த்ததும் காதல் கொள்கிறார். இதற்கிடையில் இரண்டு பாடல்கள், மூன்று சண்டைகள், காமடி என்ற பெயரில் லொள்ளு சபா ஜீவா சொதப்பல்கள். வேஸ்ட் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் காலேஜுக்குள்ளே இரண்டு குரூப். மாறி, மாறி ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவார்கள். இரண்டு குரூப்புக்கு நடுவில் பீ. வாசுவின் மகன் சக்தி, திடீரென்று சமரச முயற்சி செய்து தோற்கிறார். காலேஜ் எலக்ஷன் நடத்த முடிவு செய்யப்பட, ப்ரிதிவிராஜை எதிர்த்து பிரியாமணியை நிறுத்துகிறது எதிர் கும்பல். உடனே ப்ரிதிவிராஜுக்கு கோபம் வரவே காதல், மோதலில் முடிகிறது. மோதல் முத்தி கலவரம் ஏற்படுகிறது. இதற்கு இடையில் திடீரென்று சக்தி இறந்து கிடக்கிறார். சக்தியின் அப்பாவாக வரும் பாக்கியராஜ் குமுறி அழுகிறார். (பாக்கியராஜ் கையை உருட்டி, உருட்டி பேசும்போதெல்லாம் லொள்ளு சபாவில் ஜீவா செய்யும் மிமிகிரிதான் ஞாபகம் வருகிறது. இது ஜீவாவின் வெற்றி.)

சக்தியின் எட்டாவது (அது என்ன எட்டாவது?) நினைவு நாளை கொண்டாட மீண்டும் நண்பர்கள் காலேஜில் ஒன்று சேர்கிறார்கள். இந்த விழவிற்குதான் எலக்ஷன் போதே காணாமல் போன (படிப்பை பாதியிலேயே கை விட்ட) பிருதிவிராஜ் பிளைட்டில் வந்து சேருகிறார். என்னதான் 'இண்டிகோ' ஏர்லயன்ஸ் 'சீப்' பான பிளைட் விட்டிருக்கிறது என்பதற்காக இப்படியா?

விழா முடிந்தவுடன் யாரோ பிரிதிவிராஜை கொலை செய்ய முயற்சி செய்ய திடீரென்று கதை நம்ம ரமணன் சொல்லும் வானிலை அறிக்கை போல திசை மாறுகிறது. வில்லன் யார் என்று நாம் குழம்பும்போது சற்றும் சம்பந்தம் இல்லாமல் 'புர்க்கா' அணிந்த உடன் படித்த தோழியை காட்டுகிறார்கள். அவர் ஒரு புதிய கதை ஒன்றை விட்டு சக்தியுடன் அழகான பாடல் ஒன்றை பாடுகிறார். பிறகு தான் பிரிதிவிராஜை கொலை செய்ய முயன்றதன் காரணத்தை விளக்குகிறார். அதன்படி ப்ரிதிவிராஜ்தான் சக்தியை கொலை செய்தார் என்று புது கதை விடுகிறார். "ஐயோ" "தலை சுத்துதே" என்று நீங்கள் ஓடுவது தெரிகிறது.

எனக்கு ஒரு சந்தேகம், இந்த கதையை டைரக்டர் எப்படி ப்ரோடுசருக்கு புரிய வைத்தாரோ, எனக்கு புரிய வில்லை.

ஒரு சந்தோஷமான விஷயம். காலேஜில் ஒரே ஒரு காட்சியில் H2O

என்று பாட சம்பந்தமாக எழுதுகிறார் மனோபாலா.

பழைய 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை நம்பி இதை பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Tuesday, September 8, 2009

வானத்தில் ஒரு வட்டம்


வானத்தை சுவரெனக்கொண்டு
வரைந்தேன் ஓவியம் ஒன்று.
தென்னையை தூரிகையாக்கி
வெண்மையை மையாக குழைத்து,
தென்றலை வாரி இரைத்து,
மேகங்களை மிதக்க விட்டேன்.
கதிரவனை கருத்தில் நிறுத்தி,
வெண்-மையை
மையத்தில் விதைத்தேன்.
தானாகவே போட்டுக்கொண்டான் தன்னை சுற்றி வேலி ஒன்றை.
பாவி அவன் என்னையே நம்பவில்லையோ?

Tuesday, September 1, 2009

ஓரம் கட்டெய்................

அண்ணா, சந்தோசமா மைசூர் பாகு சாப்பிடுங்க. நான் வச்சிருக்கேன் திருநெல்வேலி அல்வா, சுட- சுட, சூப்பரா இருக்கும். ஒரு வில்லை சாப்பிட்டீங்க, அப்புறம் வாயே தெறக்க மாட்டீங்க.