Saturday, October 17, 2009

கர-கர, மொர-மொர, ட்டப்....

தீபாவளின்னாலே, பலகாரம்தான், பேஷ்,பேஷ் ...ரொம்ப நன்னாருக்கே!

இப்போ ரவா லாடு, மைசூர்பா, முறுக்கு, தேன்குழல், ஓலை பகோடா, முந்திரி கேக் இதெல்லாம் எப்படி பண்ணலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி என்ன பண்ணலாம் என்பதை பார்த்து விடலாம்.

முதலில் மைசூர்பா: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மெல்ல அழுத்தாமல் மைசூர்பாவை எடுக்கவும். பிறகு எடுத்த மைசூர்பாவை யாரும் பார்க்காத வண்ணம் லேசாக தூக்கி, நாக்கில் வைத்து முதல் பதத்தை ருசித்து விடவும். பின்பு (இப்போ யார் பார்த்தாலும் பரவாயில்லை) மைசூர்பாவை நாக்கால் உள்ளிழுத்து முன் பற்கள் அதிகம் படாமல் உதடுகளால் கடித்து உமிழ்நீரைக்கொண்டு கரைக்கவும். கரைசலை மெல்ல நாக்கினுள் ஓடவிட்டு, விழுங்கவும். இப்போது தொண்டைகுழாய் முழுவதும் இனிப்பு பரவுவதை கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசிக்கவும்.

அடுத்து ரவா லாடு: ரவா லாடையும் அழுத்தாமல் மூன்று விரல்களால் எடுக்கவும். அதை லேசாக மூக்கருகில் கொண்டு சென்று, ஏலக்காய் வாசனையை முகரவும். பின்பு வாயை தேவைக்கேற்ப திறந்து கொண்டு ரவா லாடை பற்களுக்கு இடையில் வைத்து லேசாக கடிக்கவும். கடிக்கும் போது ரவா லாடு தூள்கள் வெளியில் வந்து விழாமல் இருக்க மிக லாவகமாக பிடிக்கவும். வாய் கொள்ளும் அளவுக்கு மட்டும் ரவா லாடை கடிக்கவும். இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளேயே நாக்கை உபயோகப்படுத்தி அசை போடவும். மிக முக்கியமாக உங்களுக்கு அருகில் ஜோக்கு பேர்வழிகள் இல்லாமல் பார்த்து கொள்ளுவது நல்லது. ஏனெனில், அவர் அடித்த ஜோக்குக்கு, நீங்கள் "ப்ப்ர்ர்.." என்று சிரிக்க போக எதிரில் நிற்பவர் மூஞ்சியில் விபூதி அபிஷேகம் நடக்க வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.

அடுத்தது முறுக்கு, ஓலை பகோடா, தேன் குழல்: இவற்றை விரல்களில் எடுத்து ரசனையோடு தின்றால் நாகரீகமாக இருக்கும். பறக்காவெட்டி போல் உள்ளங்கையில் அள்ளி, வாய்க்குள் கொட்டிக்கொண்டு, கர-கர-கரவென்று கான்கிரீட் மெஷின் போல அரைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மற்றபடி எங்கே சாப்பிடலாம் என்பதை அதனதன் ருசியை வைத்து, டி.வீக்கு முன்னால் அமர்ந்தபடியோ, போகும்போது-வரும்போதோ, "ரெபிரிஜிறேட்டரை" திறந்து பார்த்து எதுவும் கிடைக்காமல் போகும்போது தின்பதற்கோ, நிஜமாகவே ருசியாக இருப்பின், ஆர-அமர பலகாரங்களோடு சேர்த்தோ சாப்பிடலாம்.

இனிமேல் செய்முறை பற்றி பார்ப்போம்.
என்னத்துக்கு இந்த அனாவசிய வேலை எல்லாம். பேசாமல் வீட்டில் செய்த பலகாரங்களை சத்தம் போடாமல் தின்று விட்டு அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

No comments:

Post a Comment