Sunday, December 5, 2010

ஒரு விளம்பரம் ....சும்மா வெவ்வேவ்வேவே..

"கண்ணா...விக்கி லீக்சால மானம் கப்பலேறி போச்சா?
கவலைப்படாதே.... M-சீல் தடவு, பலமாக ஒட்டு.
மானத்தை பத்திரமா பாத்துக்க...

ஹா...ஹா...ஹா............

ஆசாமி: ஏதோ...நேரு ரேடியோவாமே... அந்த ரேடியோ இருக்கா?

கடைக்காரர்: இன்னாது, நேரு ரேடியோவா?

ஆசாமி: அட, அதாங்க ரகசிய உரையாடலெல்லாம் வெளிய வருதுன்னு சுப்ரமணிய சாமிகூட சொன்னாரே...அந்த ரேடியோ.
கடைக்காரர்: யோவ்..அது நேரு ரேடியோ இல்ல. நீரா ராடியா...

சுப்புணி: டேய்... கோண்டு, மாமா ஏன் ரொம்ப கவலையாய் இருக்கார்?

கோண்டு: அதோன்னுமில்லடா சுப்புணி, மாமா நேத்து, பக்கத்தாத்து மாமியிண்ட ஜொள்ளு விட்டுண்டிருந்ததை 'விக்கி லீக்ஸ்'ல வீடியோவா போட்டுட்டாளாம். அதான் என்ன நடக்குமோன்னு நடுங்கிண்டிருக்கார்.

Friday, November 26, 2010

ரூ.ரெண்டு போட்டு பதினொரு சைபர் ஊழல்...தமாசு.



அண்ணே ... 2G ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நீங்க நெறைய தள்ளுபடி கொடுத்தீங்களாமே, அல்லாத்தையும் ஒன்பது வருஷத்துக்கு முந்தின விலையிலேயே வித்தீங்களாமே. நீங்க எவ்வளோ நல்லவரு. உங்கள போய் மந்திரி பதவீலேந்து எடுத்துட்டாங்களாமே, ஏன்னா நாயம் இது? நல்லவங்களுக்கு இது காலமில்லீங்கண்ணே... அவுங்க கெடக்குறாங்க உடுங்க.

ஹீ,ஹீ,... அண்ணே, அப்படியே, பழைய விலையிலேயே... அதாங்கண்ணே...ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி வித்த விலையிலேயே ஒரு பத்து பவுனு...தங்கம், அப்புறம், ஒரு மூணு மூட்டை பொன்னி அரிசி, மூணு கிலோ வெள்ளி, அப்புறம் கொஞ்சம் பாத்திரம்,பண்டம்,...

அட... காய்கறியெல்லாம் என்ன வெலவிக்குது இப்போ... அதனால பழைய விலையிலேயே எல்லா காயும் மூணு,மூணு கிலோ போதும். அப்பொறம்...தாம்பூலத்துக்கு வெத்தல, பாகு, மூணாவது...தேங்கா, பலகாரப்பொட்டலம், ம்ம்...

அட... ஜவுளிய மறந்துட்டேங்கண்ணே... முகூர்த்ததுக்கு, பொண்ணு அழைப்புக்கு,...

அண்ணே, அண்ணே, அண்ணே,... ... ஓடாதீங்கண்ணே.... ஒங்கள நம்பித்தான் நம்ம தமிழரசிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன்.

அண்ணே,..அண்ணே...

Saturday, November 6, 2010

எந்திரன்- நேற்று, இன்று, நாளை....

ஆரம்பிச்சுட்டாங்கப்பா.....
எந்திரன் படம் ரிலீசுக்கு முன்னால பாடல் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, என்று திகட்டும் அளவுக்கு அள்ளி வழங்கினார்கள். படம் வெளி வந்தவுடன் எப்படா நேரம் என்று பார்த்து, படம் தயாரித்த விதம் என்று மீண்டும் திகட்ட வைக்கிறார்கள். ஆனால் கூட தயாரித்த விதம் பார்ப்பதற்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது. சரி...தயாரிப்பில் ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள் வருகிறார்களே, இந்த படமும் ஹாலிவுட் படம்தானோ?

Sunday, October 17, 2010

எந்திரன் - எண்பது ரூபாயில்!



ஒரு வழியாக வந்து விட்டான் 'எந்திரன்'. எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், அதுக்கு பல படிகள் மேலே சென்று விளம்பரங்கள், அனைத்து ஊடகங்களையும் தன் ஆக்கிரமிப்புக்கு கொண்டு வந்து இதை பார்த்தே ஆக வேண்டும், இதை மட்டுமே பார்க்க வேண்டும், திரைப்படம் என்றால் 'எந்திரன்' என்ற அளவுக்கு திகட்ட வைத்து விட்டார்கள். ரஜினிகாந்த் ரசிகனான எனக்குகூட இந்த ஓவர் டோஸ் வைத்தியம் வெறுத்து போக, "டிக்கட் விலை குறைந்தாலே ஒழிய பார்ப்பதில்லை" என்ற வைராக்கியத்தோடு பொறுமை காத்த எனக்கு, எண்பது ரூபாயில் 'எந்திரன்' நேற்றுதான் அமைந்தது. இப்போது எந்திரனை பற்றி பேசுவோம்.
விஞ்ஞானத்தை அஞ்ஞானம் தொற்றி கொண்டால் என்ன ஆகும்? எந்திரன் ஆகும்.
'ரோபோட்டிக்ஸ்' விஞ்ஞானியான ரஜினியின் பத்து வருட அயராத முயற்சியில் அவதரித்த புத்திரன்தான் 'எந்திரன்'. சொல்லி கொடுத்தவற்றை கன கச்சிதமாக நொடிப்பொழுதில் முடிக்கும் ரோபோ. கண்ணை சற்று மூடிக்கொண்டு உங்களை ஒரு மாவீரனாக, சகலகலா வல்லவனாக நினைத்து பாருங்கள். இப்போது கண்ணை திறந்து எந்திரனை நினைத்து கொள்ளுங்கள். உங்களை விட நூறு மடங்கு பராக்கிரம சாலி இந்த எந்திரன். அந்த பராகிரமசாலியை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தினால் நம்ம பங்காளிகளை பந்தாடிவிடலாம் என்ற நோக்கத்தில் ரஜினி எந்திரனை உருவாக்குகிறார். ஆனால் உள்ளுரிலேய ஒரு பங்காளி இருப்பதை அவர் உணரவில்லை. அந்த பங்காளி (ரஜினியின் மூத்த அதிகாரி) எந்திரனை வெளி நாட்டு பங்காளிகளுக்கு விலை பேச திட்டமிடுகிறார். 'எந்திரன்' ஒரு ஆபத்தான விஷயம், அதை ராணுவத்தில் பயன் படுத்துவது தவறு என்று சாதித்து ரஜினியை (வழக்கம்போல) அழுத்தி வைக்கிறார். எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருமாறு ரஜினியை தூண்டுகிறார். இந்த சதியை உணராத ரஜினி, எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருகிறார். கோபம், துக்கம், காதல், அன்பு, என்று எல்லா உணர்வுகளையும் கற்றுக்கொண்ட எந்திரன், காதல் விஷயத்தில் ரஜினிக்கே போட்டியாக வந்து வில்லனாக மாறுவதுதான் கதையின் சாரம். சங்கர் படம் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. எந்திரனும் அப்படித்தான். இதில் பிரமாண்டம் ஓவர் டோஸ். ரஜினிகாந்த் இருபது வயது குறைவாகதெரிவது சந்தோஷம் தருகிறது. எந்திரன் ரஜினி, விஞ்ஞானி ரஜினியை எல்லா விதத்திலும் மிஞ்சி விடுகிறார். (மூன்று முகம்-அலெக்ஸ் பாண்டியன் போல). ஓடும் ரயிலில் எந்திரன் பறந்து, பறந்து சண்டை போடுவது சூப்பர்ப். சமையல், வீடு வேலை, நடனம், சண்டை, அறிவு என்று அனைத்திலும் எந்திரன் அமர்க்களப்படுத்துகிறான். ஐஸ்வர்யா ராயுக்கு வயது ஆக ஆரம்பித்து விட்டது கொஞ்சம் தெரிகிறது. பாடல்கள், சொல்ல தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து பிடிக்குமோ, என்னவோ? படம் முழுக்க "கிராபிக்ஸ்" மயம். (என் மகன் "இந்த சீன், G.T.A வைஸ் சிட்டி விளையாட்டில் வருகிறது" என்று சொன்னபோது சிரிப்பு வந்தது)
எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்ததால் சில, பல குறைகளை கூறாமல் இருக்க முடியவில்லை. எந்திரனுக்கு "பாட்டரி லோ" வருவது ஏதோ 'நோக்கியா' செல் போன் பாட்டரி போல் சொல்லியிருக்க வேண்டாம். பல வருடங்களாக விண்ணில் 'பாட்டரி லோ' ஆகாமல் சுற்றி வரும் விண்கலங்களை நினைவில் கொண்டிருக்கலாம். க்ளைமாக்ஸ் சண்டையில் "பார்மேஷன்" என்ற கட்டளையில் நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று எந்திரர்கள் தானாக உருவாகி 'அனகோண்டா', 'ஹல்க்', 'டெர்மினேட்டர்' கிளைமாக்ஸ் களை எல்லாம் ஒன்று சேர்த்திருக்க வேண்டாம்.
மொத்தத்தில் எந்திரனுக்காக இயக்குனர் சங்கருக்கு ஒரு ஜே!
முப்பது வயது ரஜினிக்கு ஒரு ஜே!!
பலவருடங்களுக்கு முன்னதாகவே இந்த கதையை உருவாக்கித்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு ஜே!!!
எந்திரன் - அமோக விற்பனை.

Saturday, September 25, 2010

அந்தமான் ஜெயில்

உங்க உடம்ப பார்த்தா ஜெயில் கைதி மாதிரி தெரியிலையே?

இந்த லொள்ளு தானே வேணாங்குறது! வீர முழக்கம் செய்யும்போது என்ன இளிப்பு?

Thursday, August 19, 2010

நினைத்தாலே இனிக்கும்

ஒரு அழகான காதல் பாட்டை கேளுங்க....பாருங்க.

Saturday, July 17, 2010

ரெங்குடுவின் ரெட்டைவால்

நான் ரொம்ப சமத்து, ஆங்கிலத்துல சொல்லணும்னா, "ரிசர்வ்ட் டைப்". ஆனாலும் சமயத்துல என்னையும் அறியாமல்? என் ரெட்டை வால் வேலை காட்டியிருக்கிறது, பல சமயங்களில். சாம்பிளுக்கு இதோ. வால் நம்பர் ஒண்ணு:
அரியமங்கலத்தில் சேஷசாயி இன்ஸ்டிடியுட்டில் தொழில் நுட்ப கல்வி படிக்கும்போது நடந்த விஷயம். கடைசி பீரியட் சீக்கிரம் முடிந்து விட்டால் ஓட்ட, ஓட்டமாக ஓடி வந்து 4:40 ரயிலை பிடித்து விட்டால் போதும், வீட்டுக்கு (லால்குடியில் இருக்கிறது) ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விடலாம்.....என்று புளுக மனமில்லை. அந்த ரயிலில்தான் டவுன் ஸ்டேஷனில் "எஸ்.ஆர். சி", எஸ்.வீ.எஸ்"பிகரெல்லாம் ஏறுவார்கள். அவர்களை நோக்கி ஜொள்ளு விட்டுக்கொண்டே வந்தால் ரயில் பயணம் போரடிக்காமல் இருக்கும். இதுக்கு போட்டி போட்டுக்கொண்டு கையில் 'மினி டிராப்டார்'ஐ தூக்கிக்கொண்டு ஓடி வந்து பிடித்து விடுவோம். சில நாட்களில் கடைசி பீரியட் ஆசிரியர் வரவில்லையென்றால் ஜாலிதான், நிதானமாக நடந்து வந்து தலையை வாரி ஒப்பனைஎல்லாம் செய்து கொண்டு வண்டியில் ஏறிவிடுவோம். அப்படி ஒருநாள் தான் என்னுடைய ரெட்டை வால் வெளியில் தலை காட்டியது. என் வாலை விட இரு மடங்கு நீளமானது நாகராஜனுடையது. அவன் ஐடியா தர, மற்ற நண்பர்களை வெறுப்பேத்த தயாரானோம். 'ப்ளான்' இதுதான். ரயில் வருவதற்கு முன் "கை காட்டி"யை இறக்குவார்கள். கை காட்டி இறங்கியதும் மாணவர்கள் தொலை தூரத்திலிருந்து ஓட்டமாக ஓடி வருவார்கள். 4: 20 கே வந்துவிட்ட நானும், நாகராஜனும் கை காட்டியை இறக்கும் கம்பியை ஒரு காலால் அழுத்தி இழுத்து பிடித்து கொண்டதும், கை காட்டி இறங்கி விட்டது. தூரத்திலிருந்து பார்த்த மாணவர்கள் ஓட்டம் பிடித்து வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தவுடன் கம்பியை விட்டு விட்டு அப்பாவியாக உட்கார்ந்து விட்டோம். இப்படி இரண்டு மூன்று முறை செய்து விட்டு, நான்காவது தடவை செய்யும்போது ஸ்டேஷன் மாஸ்டர் எங்களை கையும், களவுமாக பிடித்து எங்கள் 'வொர்க் ஷாப் சூபரின் டெண்டன்டிடம்' ஒப்படைத்து விட்டார். அவ்வளவுதான், எங்கள் பாசை பிடுங்கி எங்களை ஒரு வழி செய்து விட்டார்.

வால் நம்பர் ரெண்டு:
ஒரு முறை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் எனபதை ஸ்டேஷனில் உள்ள கரும் பலகையில் எழுத சொல்லி சாக்பீஸை எங்களிடம் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்க, அத்தனை ரயிலும் ஒரு மணி நேரம் தாமதம் என்று நாங்கள் வேண்டுமென்றே எழுதி விட வந்ததே கோபம் அவருக்கு. மீண்டும் வொர்க் ஷாப் சூப்பரிண்டேண்டன்ட், பின்பு பிரின்சிபால் என்று பெரியதாய் போய் விட்டது. ஒன்று சொல்ல வேண்டும். திருவாளர் அனந்த நரசிம்மாச்சார், அவர்தான் எங்கள் பிரின்சிபால், தெய்வமுங்க. "மன்னிப்பு" தமிழ்ல அவருக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை.

Sunday, June 27, 2010

சிங்கம் = தினத்தந்தி

கொட்டை எழுத்தில், அதிரடியாக தலைப்பு செய்திபோல் ஆரம்பித்து, நம் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் மாற்றமில்லாமல் சரியான நேரத்தில் பாட்டு, சரியான நேரத்தில் சண்டை, சரியான நேரத்தில் காதல், கலகலப்பு (அவ்வப்போது விவேக்கின் கடிப்பு) என்று மூன்று மணி நேரத்தில் நமக்கு என்ன தேவையோ அதை சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் தினத்தந்தி பேப்பர் படித்த திருப்தி நமக்கு கிடைத்து விடுகிறது. மற்றபடி பட விமரிசனமெல்லாம் தேவையில்லை.
சிங்கம் = தினத்தந்தி



Tuesday, May 18, 2010

மவுன்ட் ஹாரியட் உச்சியிலிருந்து ஒரு க்ளிக்


அந்தமானில் முக்கியமான மலை வாசஸ்த்தலம் "மவுன்ட் ஹாரியட்" சுற்றியும் உயர்ந்து வளர்ந்த 'படாக்' மரங்களுக்கு இடையிலிருந்து இந்த அழகான கடற்கரை தோற்றம். சொன்னா, நம்ப மாட்டீங்களே,... சந்தேகமா இருந்தா, இருபது ரூபாய் நோட்டை திருப்பி பாருங்க..... இப்ப நம்புறீங்களா? தூரத்துல தெரியுறது 'ராஸ்' தீவு.

Monday, May 10, 2010

சம்மர் வந்தா ஆளு அப்ஸ்காண்டு!











அயம் சாரி.... ரொம்ப நாளா உங்கள காக்க வச்சதுக்கு. (நிம்மதியா இருந்தோம்னு நீங்க முனு, முணுப்பது கேட்கிறது) சரி, விடுங்க...விடுங்க... சம்மர் வந்தாலே குறைந்தது ஒரு வாரமாவது அப்ச்காண்டாவது நம்ம பழக்கம். இந்த முறை அப்ச்காண்டானது அந்தமானுக்குத்தான். ரொம்ப நாள் ஆசை. இந்த ஆசை வெள்ளைக்காரன் இருக்கும்போது வந்திருக்கணும்னு தானே சொல்லுறீங்க? அப்ப எனக்கு வயசு பத்தாது, அண்டர் ஏஜ்னு சொல்லிட்டாங்க. ஹீ...ஹீ...(நாங்கல்லாம் வழுக்குறதுல விலாங்கு மீனு) சரி, விசயத்துக்கு வர்றேன். எங்க குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி நாலு பேரு, மூட்டை முடிச்சைஎல்லாம் தூக்கிக்கிட்டு கெளம்பிட்டோம். ஒண்ணாம் தேதி கிளம்பி ஒன்பதாம் தேதி ரிட்டன். சும்மா தூள் கிளம்பிடுச்சு. அப்ப பறந்த தூளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்க கண்ணுல தெளிக்கப்போறேன். நல்லா இறுக்கி கண்ணை....தெறந்து வச்சுக்குங்க. ஒகே. வர்ட்டா......




Wednesday, April 28, 2010

உல்ட்டா..உல்டா...

பதினொரு பேரு, மூணு மணி நேரம் இப்பிடி பொரட்டி, பொரட்டி எடுத்துட்டாங்கையா...



அத்லேந்து எல்லாமே இப்பிடி உள்ட்டாவாவே தெரியுது.

அட சொன்னா நம்புங்க, இப்ப கூட அப்பிடிதான் தெரியுது.

Sunday, March 21, 2010

சில டிப்ஸ்..சும்மாச்சுக்கும்.



ச்சே ...என்னமா தூங்குறாங்க. அட அடுத்த படத்த பாருங்க, அடாடா....என்ன சுகம், நம்ம ஊருக்கு இதெல்லாம் எப்ப வரும்? ஹ்ம்ம்.... சேலத்துலேந்து நெய்வேலிக்கு ராத்திரி ஒரு மணிக்கு ஒரு லங்கடா பஸ்ஸிலே ஏறி கடைசி சீட்டுல இரண்டு தூங்கு மூஞ்சிகளுக்கு நடுவே சிக்கிகிட்டபோது தோன்றிய ஐடியாக்கள்.
  • நம் தோளின் இரண்டு பக்கத்திலும் பழைய காலத்து ராஜாக்களின் கவசத்தில் கூறாக நீட்டிக்கொண்டு இருக்குமே, அதை நன்றாக தீட்டி வைத்து நம் தோள்பட்டையில் பொருத்திக்கொள்ளலாம்.
  • நம் தோள் பட்டையில் மூக்குபொடியை தடவி வைத்துக்கொண்டால் அவர்கள் நம் மீது முகத்தை திருப்பி சாயும்போது பொடி மூக்கினுள் ஏறி அவர்களை எழுப்பிவிடும்.
  • எலிப்பொறியை தோள்களில் பொருத்திக்கொண்டு அந்த கம்பி வளையத்தை கொக்கியில் மாட்டி வைத்துக்கொண்டு தயாராக இருந்தால், ஆசாமி நம் மீது சாயும்போது அவருடைய காது பொறியில் மாட்டிகொள்ளும். "அவுச்" என்று ஆசாமி எழுந்து விடுவார்.
  • எலெக்ட்ரானிக் முறையில் ஒரு சைரன் செய்து தோளில் பொருத்திக்கொண்டால் ஆசாமி சாயும் போது சைரன் 'ஆக்டிவேட்' ஆகி, "வீ..வீ..வீ." என்று அவர் காதுக்குள் அலறும். அடுத்த முறை ஆசாமிக்கு தூக்கமே மறந்து போகும்.
  • இதற்கெல்லாம் வசதி இல்லையா? வேறு வழி இன்றி 'ஹோலிபீல்ட்' கணக்காக காதை நன்றாக கடித்து விடுங்கள்.

இந்த கற்பனையெல்லாம் எழுந்து முடிவுக்கு வருவதற்குள் அந்த இரண்டு ஆசாமியும் தன் தலையிலிருந்த எண்ணையை (விளக்கெண்ணையோ, வேப்பெண்ணையோ தெரியவில்லை) நன்றாக சட்டையில் அப்பிவிட்டார்கள்.

Sunday, March 7, 2010

கத்திரிக்கா...கத்திரிக்கா..குண்டு கத்திரிக்கா..

மத்தியானம் புளியோதரையை ஓர் வெட்டு, வெட்டிவிட்டு ஒரு மணி நேரம் தலையை சாய்த்துவிட்டு எழுந்தேன். வாசலில் மணியோசையை கேட்டு வந்து பார்த்த போது என் நெடு நாளைய நண்பர் வந்திருந்தார். 'பயோடேக்னாலாஜி'யில் டாக்டரேட் பயில்கிறார். அவரிடம் அரைத்தூக்கத்தோடு அளவளாவியதில் சில,பல விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். முதலில் அவருடைய ஆராய்ச்சி பற்றி விசாரிக்கையில் நாம் அன்றாடம் 'அசூசி' படும் 'பாசி' பற்றி பல விவரங்களை கூறினார். பாசியின் பல வகைகள் பற்றியும், நீல-பச்சை பாசியின் மகத்துவம் குறித்தும் கூறுகையில் 'அசூசி' ஆச்சரியமாகி போனது. உலகின் மொத்த ஆக்சிஜன் தேவையில் சுமார் எழுபது சதவிகிதத்தை இந்த 'அசூசி'(நீல-பச்சை) பாசியே பூர்த்தி செய்கிறதாம். "வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்" என்பதற்கு பதில் "தெருவுக்கு ஒரு குளம் வெட்டி பாசியை வளர்ப்போம்" என்று சொல்ல தூண்டியது. மேலும் சில வகைப்பாசியினால் உலகின் எரிபொருள் தேவையை ஈடு கட்ட முடியும் என்று கூறினார்.
சத்யா ஆண்ட்டி செய்து தந்த 'கீரை' தோசையை 'பாசி' தோசை எனக்கு வேண்டாம் என்று சொன்ன என் புத்திரனின் வெகுளித்தனத்தை இந்த நேரத்தில் நினைத்து சிரித்து விட்டு அடுத்த 'ஹாட் டாப்பிக்'கான பீ.டி. கத்தரிக்கவுக்கு தாவினேன். ஆமாம், அது என்ன பீ.டி கத்தரிக்காய்? பீ.எட் கத்தரிக்காய்? என்றவனை நகைப்போடு பார்த்து விட்டு விவரித்தார்.
"பாசில்லஸ் துரின்கீன்சிஸ்" என்பதே பீ.டி. பீ,டி ஒரு வகையான மண் சார்ந்த நுண் கிருமி (பாக்டீரியா) இந்த நுண் கிருமியை கத்தரிக்காயின் டி.என்.எ வில் புகுத்தி செயல் மாற்றம் (coding) செய்து விடுவார்கள். இந்த நுண் கிருமி கத்தரிக்காயில் உள்ள பூச்சியில் சென்று புரோட்டீன் கட்டியாகி அதன் குடலில் சிதைவு உண்டுபண்ணி கொன்று விடும். அதனால் கத்தரிக்காய் நன்கு செழிப்பாக வளரும். இந்த முயற்சி நம் நாட்டில் ஏற்கனவே பருத்தி வகையில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நுண் கிருமியினால் பட்டாம் பூச்சியின் லார்வாக்கள் அழிந்து விடுவதால் பட்டாம்பூச்சியினமே அழியும் அபாயம் இருப்பதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எது எப்படியோ நேற்றைய மாலைப்பொழுது அறிவார்த்தமாக சென்றது மகிழ்ச்சியளித்தது.

Sunday, February 28, 2010

எங்க ஏரியா உள்ள வராத........

என்ன கடிச்சுட்டா? என் சாதிக்காரன்லாம் உன்ன சும்மா உட்டுடுவானா?

Monday, February 22, 2010

எங்கே பிராமணன்? தேடுகிறார் சோ.

"ஜெயா டி.வி" யில் சோவின் "எங்கே பிராமணன்-பாகம்-2" பார்த்தீர்களா?
உண்மையான பிராமணனை, உண்மையாகவே தேடிப்பார்த்து களைத்துப்போய் விட்டாரோ சோ? வேறு வழியில்லாமல் அய்யராத்து பாஷை சுட்டுப்போட்டாலும் வராதவர்களை பேச வைத்திருக்கிறார்கள் சோவும், வெங்கட்டும். "ஆத்துக்கு போ" என்பதைத்தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை அவர்களுக்கு. திடீரென்று "இன்னாத்துக்கு" என்றெல்லாம் பேசுவது ஒரே காமடி. சோ- சீரியசான விஷயங்களை தெளிவாக சொல்கிறார், சரி-ஆனால் எதிரே அமர்ந்திருப்பவர் 'லூஸ் மோகன்' ஸ்டையிலில் கேள்விகளை கேட்பது எடு படவில்லை. பார்ப்பவர்களுக்கு சீரியஸ்னஸ் குறைந்து விடுகிறது. (சோ-வை கேட்டால் நக்கல் சிரிப்போடு "குழப்புவதுதான் என் வேலை" என்பார்)
"நோக்கு தெரியுமோ? எங்கே பிராமணன்ல அசோக்கா நடிக்கிற கொழந்தை, சாயபு பையனாமே! நல்ல வேளை, நம்ம ஜெயஸ்ரீ யை அவனுக்கு பாக்கலாமோன்னு நெனைச்சுண்டு இருந்தேன்" என்று பட்டு மாமி பேசுவது கேட்கிறது. அசோக்- அத்தனை சமத்தாக நடித்திருக்கிறார். சோவின் முயற்சி முழு வெற்றி அடைய வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் சீரியசாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
மொத்தத்தில் நல்ல முயற்சி. பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு நிறையவே வருத்தம் கலந்த கோபம் வருவது உண்மை.

Sunday, February 21, 2010

இருநூறு வருடங்கள் பின்னோக்கி செல்கிறோம்...


வெறும் சிரிப்பு படங்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும் பழைய காலத்திற்கே செல்கிறோமோ என்ற கவலைதான் வருகிறது. இதற்காக அரும்பாடு பட்டு நம்மை பின்னோக்கி தள்ளுபவர்கள் நாம் ஓட்டு போட்டு உட்கார வைத்த அரசியல் வாதிகள்தான். சுயநலம் ஒன்றே தம் குறிக்கோளாக கொண்டுள்ள இவர்களை நாம் தான் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்கிறோம். "இந்தியா வளர்கிறதே" என்று அந்நியர்கள் கவலைப்படலாம், ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகளே கவலைப்பட்டால்?
ஹ்ம்ம்...... நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.

Monday, February 8, 2010

சிறிது சிந்தனைக்கு........

சமீபத்தில் என்னை பதற வைத்த செய்தி. "பத்தாவது படிக்கும் மாணவன், சக மாணவனை கழுத்தை இறுக்கி கொன்றான்"
இது நடந்தது, அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம்ம சேலத்தில்தான். பள்ளியின் ஹாஸ்ட்டலில் நடந்த கொடூரம்தான் இது. மொபைல் போன் வாங்கித்தருவதாக கூறி பெற்றுக்கொண்ட வெறும் எழுநூறு ரூபாயை திருப்பிக்கேட்டதற்கு தான் இந்த கொலை நடந்துள்ளதாக தகவல். "பணத்தை திரும்ப தராமல் போனால் பள்ளி முதல்வரிடம் கூறி விடுவேன்" என மிரட்டியதற்காக தன் சக மாணவனை, நண்பனை துணியால் கழுத்தை நெரித்து, பின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று விட்டதாக மாணவன் கூறியுள்ளான். பதினான்கு வயதில் கொலை செய்யும் அளவுக்கு எங்கிருந்து வந்தது அந்த வெறி? நன்றாக சிந்திக்க வேண்டிய விஷயம். தூண்டியது எது? திரைப்படங்களா? டி.வீ நிகழ்ச்சிகளா? சமூக சூழலா? அல்லது பள்ளி முதல்வர் மேலுள்ள பயம்தான் கொலை செய்ய தூண்டியதா? இன்றைய நிலையில் மாணவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஓயாமல் "படி, படி, படி" என்று பெற்றோர்களும், ஸ்பெஷல் கிளாஸ், ஈவினிங் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று பள்ளி நிர்வாகமும் அவர்களை படுத்தி எடுக்கிறார்கள். ரெசிடென்ஷியல் பள்ளிகளின் நிலை இன்னமும் மோசம். காலை-4 - 6, 9 - 5, பின்பு மாலை 7 - 12 என்று மாணவர்களை கொடுமை செய்வதால் அவர்கள் மனம் எந்த அளவிற்கு பாதிப்பு அடைகிறது என்பது பற்றியெல்லாம் கவலை இல்லாமல் மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்று வாட்டி வதைக்கிறார்கள். மறுக்கும் மாணவர்களுக்கு தீவிர தண்டனைகளை விதிக்கிறார்கள். ஆசிரியரை கண்டால் பக்தி வருவற்கு பதில், பயம் மட்டுமே வருவதால், ஆசிரியர் என்றாலே சிம்ம சொப்பனமாக பார்க்கும் பரிதாபத்துக்குரியவர்களாக தான் மாணவர்கள் திகழ்கிறார்கள். இந்நிலையில்தான் அவர்களுக்கு பயந்துபோய் சில நேரங்களில் தவறு இழைக்கிறார்கள். ஏற்கனவே மன நிலையில் பெரும் பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் பெரிய கொடும் செயல்களை செய்து விடுகிறார்கள். இதனால் தனக்கு நேரப்போகும் சீரழிவுகளைக்கூட சிந்தித்து பார்க்காமல் செயல்களில் இறங்குகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்க வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, பிள்ளைகளாக பார்க்க வேண்டும், படிக்கும் இயந்திரமாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி நிர்வாகமும், வெறும் லாப நோக்குடனும், மதிப்பெண் நோக்குடனும் செயல் படுவதை தவிர்த்து மாணவர்களின் முழுமையான அறிவு வளர்ச்சிக்கு பாடு பட வேண்டும். படிப்பு ஒன்று மட்டுமே வாழ்க்கை என்றில்லை, அவரவர் திறனுக்கேற்ற பல வழிமுறைகள் உலகத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை கண்டவர்கள் பலர் படிப்பு விஷயத்தில் சுமாராகவே இருந்திருக்கிறார்கள். அம்பானியும், சச்சின் டெண்டுல்கரும் படிப்பில் புலிகள் இல்லை. நாம் கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகளை படிப்பு எனும் சிறிய விஷயத்திற்காக பலி கொடுத்து விடக்கூடாது.

Sunday, January 10, 2010

அட்வைஸ் பண்றாங்கோ, அட்வைஸ்....

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.